Saturday, August 1, 2020

மொரப்பூரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் முழுமையான பால் வாங்காததால், விவசாயிகள் தன்னார்வ அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக பாலை வழங்கினர்.

மொரப்பூரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் முழுமையான பால் வாங்காததால், விவசாயிகள் தன்னார்வ அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக பாலை வழங்கினர். 


தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் காலை, மாலை இரு வேளைகளில் பால் ஊற்றி வருகின்றனர். மேலும் தினமும் மொரப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து பத்து கேன் வீதம்,  காலை, மாலை வேளையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்ட ஆவின் நிர்வாகம் சார்பில் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யும் அளவை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளது. இதனால் விவசாயிகளிடமிருந்து லிட்டருக்கு 100 மில்லி பால்  திருப்பி அனுப்பப்படுகிறது.

தொடர்ந்து நேற்று தருமபுரி மாவட்ட ஆவின் நிர்வாகம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பால் கொள்முதல் செய்வதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமுடக்கத்தால் வருவாய் இன்றி பால் வாங்க கூட சிலர் தவித்து வருவதால், பாலை கீழே ஊற்றுவதால், யாருக்கும்  பயனில்லை. இதனால் மொரப்பூர் பகுதியில் உள்ள ஒரு சில விவசாயிகள், பொதுமக்களுக்கு இலவசமாக கொடுக்க முன்வந்தனர். தொடர்ந்து மொரப்பூர் பகுதியில் செயல்படும் நமது மொரப்பூர் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் பேருந்து நிலையத்தில் வைத்து, இலவசமாக பாலை மொரப்பூர் காவல் ஆய்வாளர் மஞ்சுளா பொதுமக்களுக்கு வழங்கினர்.  

 இன்று 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 200 லிட்டர் பாலை வழங்கினர். இந்த பாலை தன்னார்வ அமைப்பினர் மூலம் விவசாயிகள், பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் பால் இலவசமாக வழங்குவதை அறிந்த மக்கள் பாத்திரத்துடன் வந்து சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். மேலும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் விவசாயிகளிடமிருந்து பால் வாங்கும் வரை பால் இலவசமாக வழங்கப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment